இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 1-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு சாதாரணமாக பெய்த மழை அதன்பின்பு தீவிரம் அடைந்தது. பின்னர் மீண்டும் லேசாக பெய்து வந்த மழை இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது
கடந்த 2 வாரங்களாக கேரளாவின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து மாநிலத்தின் காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியுள்ளது. இதையடுத்து இந்த 6 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது 6 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதை குறிக்கும்.
இதுபோல கேரள கடற்கரை மற்றும் லட்சத்தீவு முதல் கர்நாடகா கடற்கரைகளிலும் பலத்த சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இப்பகுதியில் வருகிற 7-ந் தேதி வரை 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறியுள்ளது.
இதனால் கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குழிக்குன்னம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் புஷ்பா என்ற பெண் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக இறந்தார். இதுபோல நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.இருப்பினும் நிலச்சரிவில் சிக்கி கொண்டவர்களை மிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.