Papua New Guinea Landslide : பப்புவா நியூ கெனியாவில் நேற்று (24.05.24) ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.
பப்புவா நியூ கெனியா நாடு தென்மேற்கு பசுபிக் கடலோரத்தில் அமைந்துள்ளது.
இந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் என்ற கிராமத்தில் நேற்று (24.05.24) வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த கொடூர சம்பவத்தின் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரிவதற்கு முன்பாகவே நிலச்சரிவில் சிக்கி உயிரை இழந்தனர்.
இதையும் படிங்க : மண்ணுக்குள் புதைந்த வீடுகள்.. திடீர் நிலச்சரிவு!
இந்த நிலச்சரிவில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று (25.05.24) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் நேற்று கூறுகையில், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறி இருந்தனர்.
நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகின்றது. ராட்சத இயந்திரங்களுடன் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதாலும், பாறைகளும், மரங்களும் நிறைந்து காணப்படுவதாலும் மீட்பு பணிகள் சற்று சவால் நிறைந்ததாகவே உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் அங்கு ஏற்பட்டுள்ள துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த திடீர் நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.