சென்னையில் இன்னும் 10 நாட்களுக்கு அனைத்து காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, காய்கறிகளின் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை கடந்தும் சில்லரைக்கடைகளில் 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை சரிந்து ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து ஒரு கிலோ 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி மட்டுமின்றி புடலங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்களின் விலையும் கடுமையாக உயர்ந்து கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை காரணமாக காய்கறி தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்றும், தட்டுப்பாடு நீங்கி காய்கறிகளின் விலை கட்டுக்குள் வர இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும் இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறியுள்ளனர்.