அப்பல்லோ மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நாளை நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்த இடங்கள், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை, திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளான ஏரல், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் அப்பல்லோ மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நாளை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.
மழை பாதித்த 4 மாவட்டங்களில் மருத்துவ கட்டட கட்டமைப்பு, மருந்துகள் என 315 இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார். பின்னர், நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.