திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியத்தில் சூரம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு உள்ள கோயில் ஒன்றில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோயில் விழாக்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே சூரம்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு தனியாக கோயில் உள்ளது.இந்தக் கோயிலில் கடந்த 5.6.2023 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காகவும்,கோயிலுக்கு வரி கொடுக்கவும் இதே சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களில் வசிக்கும் 5வாலிபர்கள் முன்வந்துள்ளனர்.
ஆனால் கோயில் நிர்வாகம் ஐந்து வாலிபர்களும் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதால் வரி வாங்க முடியாது, கோயில் விழாவில் சேர்த்துக் கொள்ள இயலாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காதல் திருமணம் செய்து கொண்ட 5வாலிபர்களும் இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் மே 8ந் தேதிபுகார் செய்தனர். முசிறி போலீசார் விசாரணை செய்து முசிறி வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பரிந்துரை செய்து இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.
ஜூன் 2ந் தேதி முசிறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோயில் கும்பாபிஷேகத்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபாடு செய்வதற்கு ஒப்புக் கொள்வதாகவும், பின்னர் நடைபெற உள்ள பூஜையில் உரிய சடங்குகளுக்கு பின்னர் சேர்த்துக் கொள்வதாகவும் நிர்வாக தரப்பில் கூறியுள்ளனர்.
இதையடுத்து கும்பாபிஷேக விழாவில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தங்களது மனைவி பிள்ளைகளுடன் சென்று கலந்து கொண்டனர். அன்று மாலை தேங்காய் பழம் படைப்பதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களுக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காதல் திருமணம் செய்த வாலிபர்கள் முசிறி காவல் நிலையத்தில் மீண்டும் வந்து ஜூன் 6ந்தேதி புகார் செய்தனர். புகாரின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சுமூக உடன்பாடு எட்டவில்லை. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோயிலில் தேங்காய் உடைத்து, வழிபடுவதற்கு அனுமதிக்க முடியாது,சமுதாயத்திற்கான உரிமை வரி வாங்க இயலாது, ஆடுகள் பலியிட்டு பூசை நடத்தும் நிகழ்ச்சியில் சடங்குகள் செய்யாமல் பங்கேற்க அனுமதிக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் காதல் திருமணம் செய்ததற்காக யாரையும் கோயிலில் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கக்கூடாது. அனைவரும் கோயிலில் வழிபாடு நடத்தவும் சுதந்திரமாக இருக்கவும் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என அறிவுரை கூறினார்.
இந்நிலையில் கோயில் தரப்பினர் தாங்கள் ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி காவல் நிலையத்திலிருந்து சென்றனர். இந்நிலையில் கோயிலில் தொடர்ந்து நடைபெற வேண்டிய பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமுதாயத்தினர் கோயில் விழாக்களை ரத்து செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தங்களது மனைவி பிள்ளைகளுடன் பல்வேறு ஊர்களில் வேலை செய்து வாழ்ந்து வரும் நிலையில் தங்கள் உறவினர்கள் போன்று தாங்களும் கோயிலில் வந்து வழிபாடு செய்ய இயலவில்லையே என்ற ஏமாற்றத்துடன் ஊர் திரும்பி உள்ளனர். இருப்பினும் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து திங்கள் கிழமை புகார் தெரிவிக்க இருப்பதாக பாதிக்கப்பட்ட வாலிபர்களில் ஒருவர் கூறியுள்ளார்.