ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த 7 பேரையும் விடுதலை செய்ய 2014-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடி தீர்மானித்தது.
ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 தமிழர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என்றது மத்திய அரசு இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பியது; அதேபோல் மிக முக்கியமான கருத்துகளையும் முன்வைத்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு இவ்வழக்கில் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
இவ்வழக்கை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது, யாருக்கு விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துள்ளார். சிறை நன்னடத்தையும் உள்ளது. நன்றாக படித்துள்ளார். பரோலில் வெளிவந்த காலத்தில் எந்தவித புகாரும் பேரறிவாளன் மீது இல்லை. அப்படியான நிலையில் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு எடுத்தது. அமைச்சரவையின் முடிவை ஜனாதிபதிக்கு ஏன் ஆளுநர் அனுப்பினார்? அமைச்சரவையின் முடிவு மீது ஆளுநர் ஏன் இறுதி முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார்? இது கூட்டாட்சி அமைப்பின் தன்மையையே சீர்குலைத்து விடும் என ஆளுநருக்கு எதிராகவும் கண்டனங்களையும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அத்துடன் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து அதை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.
இது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆளுநரின் இந்த நிலைப்பாட்டை ஏன் மத்திய அரசு ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் பேரறிவாளனின் 30 ஆண்டுகால சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.