நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.
நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து, வரும் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சூர்யா, வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவக்கையாக சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக் கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ளவர்களை கேட்டுக்கொள்வதாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் தெரிவித்துள்ளன