பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் மோசமான சூழல் நிலவி வருவது வேதனையளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் (TTV.Dhinakaran) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
“தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டத்தை தொடர்ந்து தற்போது நடைபெற்றுள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து உணவுப்பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மாதம் மூன்றரை லட்சம் கிலோ அளவிலான விலையில்லா ரேசன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர் புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : TNPSC குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து – ராமதாஸ் வரவேற்பு!
ரேசன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிச்செல்வம் அவர்களின் இல்லத்தில் ஆளுங்கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கக் கூடிய சிலர் பெட்ரோல் குண்டு வீசியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஏழை, எளிய பொதுமக்களுக்காக நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் விலையில்லா ரேசன் அரிசி கடத்தலை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியதன் விளைவாக, தற்போது பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் மோசமான சூழல் நிலவி வருவது வேதனையளிக்கிறது.
மணல் கொள்ளையை தடுக்கும் அரசு ஊழியர்கள் மீதும், போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் காவலர்கள் மீதும் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் இல்லத்தில் வீசப்பட்டிருக்கும் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்தி ரேசன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதோடு, பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கும் சம்பவத்தில் ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார் TTV.Dhinakaran.
இதையும் படிங்க : ‘நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்குவது கண்டிக்கத்தக்கது’ – மன்சூர் கண்டனம்