தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறி 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பிஜிஆர் நிறுவனம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அறிக்கையின் வாயிலாக யுத்தம் நடந்துவருகிறது. மின் துறையில் பல்வேறு ஊழல் நடந்துவருவதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை அடுக்கியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள் என ஆக்ரோஷமாக சவால் விட்டிருந்தார் செந்தில் பாலாஜி.
பிஜிஆர் என்ற நிறுவனத்திற்கு மின் துறை சார்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊழலுக்கு வழிவகுத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, ஆதாரமில்லாதவற்றை கூறி அதன் மூலம் இருப்பை காட்டிக்கொள்ள ஏதேதோ பேசுகிறார் என கடுகடுத்து கூறினார்.
இந்த நிலையில்தான், அண்ணாமலை ஆதாரமற்ற தகவல்களை கூறுவதாகவும், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீசிற்கு டுவிட்டரில் பதிலளித்த அண்ணாமலை, `சாதாரண விவசாயி தன்னிடம் ஆடுகள் மட்டுமே இருப்பதாகவும், திமுக அமைச்சர்களை போல ஊழல் செய்து கொடுக்க எதுவுமில்லை’ என பதிவிட்டுள்ளார்.
ஆகமொத்தத்தில், செந்தில் பாலாஜி, அண்ணாமலையின் இந்த விவகாரம் இப்போதைக்கு முடியபோவதில்லை என்பது மட்டும் புரிகிறது.