தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் பரவல் மேலும் அதிகரித்தால் அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒற்றை தலைமை என்ற இலக்கை நோக்கி அதிமுக பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இருந்த போதிலும் எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் பொதுச்செயலாளர் என பெரும்பாலான எம்எல்ஏ க்களின் குரலாக இருந்தது.
இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக வருகிறது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமும் பொதுக்குழுவை நடத்த மாற்று திட்டத்தையும் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேரடியாக நடத்தவே திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனாவை காரணம் காட்டி அரசு அனுமதி வழங்காதபட்சத்தில் இந்த மாற்று திட்டத்தை பயன்படுத்தவும் தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.