திருச்சி மாவட்டத்தில்திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில்
திருச்சி மாநகராட்சி 5பள்ளிகள் மற்றும் ஒரு நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 41 பள்ளிகளும், 135 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 27 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் மூன்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு பள்ளியும் என மொத்தம் 455 உயர்நிலை பள்ளிகள் உள்ளன.
இதில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.இதில் திருச்சி மாவட்டத்தில் 17ஆயிரத்து 713 மாணவர்களும்,
17ஆயிரத்து 540 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 253 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள்.
கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையின் காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது.
அதற்கு முந்தைய கல்வி ஆண்டில் (2019-20) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதன் காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது.
அதற்கு முந்தைய 2018-19 ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 96.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மாணவர்கள் 87.64%, மாணவிகள் 96.78% தேர்ச்சி பெற்றுள்ளனர்.