உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி நாளான நேற்று பல போட்டிகளின் இறுதி சுற்றுகள் நடைபெற்றன . அந்தவகையில் ஆடவருக்கான ஈட்டி எறிதலின் இறுதி சுற்றும் விறுவிறுப்பாக நடைபெற்றது .

இந்த இறுதி போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தபடியே இந்தியாவின் தங்கமகன் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார் .

நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றியின் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் .

அரியானாவைச் சேர்ந்த 25 வயதான நீரஜ் சோப்ரா தாய் நாட்டிற்காக படைத்த மாபெரும் சாதனையை கண்டு நாட்டு மக்கள் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர் . அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடியும் நீரஜ் சோப்ராவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறிருப்பதாவது :
“உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள்; இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், விளையாட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது” என பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .