Annamalai speech | முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த சூழலில் ‘என் மண், என் மக்கள்’ பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடத்தி வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதியில் நேற்று நடைபயணத்தில் பங்கேற்றார் அண்ணாமலை.
அதைத்தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,”குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் முதலில் குரல் கொடுத்தவர் நமது தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்.
இளைஞர்களின் உந்து சக்தியாக, தேசத்திற்காக எழுச்சி மிகுந்த உரை ஆற்றுவதில் வல்லவரான தேவர் ஐயா அவர்களுக்கு,
ஆங்கிலேய அரசு வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. அதன் பிறகு வந்த தேர்தலில், மேடைகளில் பேசாமலேயே, ராமநாதபுரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
சுதந்திர இந்தியாவின் முதல் இரண்டு தேர்தல்களிலும், ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறும் அளவுக்கு, மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த தலைவர்.
ஜஸ்டிஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே தலைவர் நமது தெய்வத்திருமகனார் தேவர் ஐயா அவர்கள்.
இன்றைய ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், அடாவடித்தனமான அரசியல் இந்த நான்கையும் அழிக்க,
நமக்கு தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மீண்டும் தேவைப்படுகிறார். அவரது ஆசீர்வாதத்தால், நாம் திராவிடக் கட்சிகளின் இந்த ஜனநாயக விரோத அரசியலை நிச்சயம் ஒழிப்போம்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762008999917125827?s=20
பாராளுமன்றத்தில் தெய்வத்திருமகனார் தேவர் ஐயா சிலை, நமது முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில்,
அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் 2002 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும், தெய்வத்திருமகனார் தேவர் ஐயா மீது மிகுந்த பற்று கொண்டவர்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், தெய்வத்திருமகனார் தேவர் ஐயா அவர்கள் காட்டிய தேசியமும் தெய்வீகமும் சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லும்,
நமது பாரதப் பிரதமர் அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல்.
தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் ஆசிகளுடன், தமிழகமும் இம்முறை தேசியத்தின் பக்கம் நிற்கும் என்பது உறுதி என்று(Annamalai speech) கூறினார்.