எதிர் வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முதல் இன்று வரை வட மாநிலங்களில் தனது கட்சி கொடியை வானோக்கி கெத்தாக பறக்கவிட்டுருக்கும் பாஜக அரசு தற்போது தென் இந்தியாவிலும் தனது கால் தடத்தை அழுத்தமாக பதிக்க திட்டம் தீட்டி வருகிறது .
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியமைக்க தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும் அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கும் வருவது சற்று அதிகமாகி வருகிறது . இதற்கெல்லாம் மேல் உலகின் மூத்த மொழி தமிழ் எனக் கூறிய பிரதமர் மோடி, தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தை நாடெங்கும் பேசி வருகிறார் .
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடி விரும்புகிறார் என இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் கிளம்பியப் புரளியை உண்மையாக்க பிரதமர் மோடி தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது .
இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் தனது ஆஸ்தான தொகுதியான வாரணாசியுடன் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட பிரதமர் மோடி மாஸ்டர் பிளான் போட்டு வருவதாக ஒருபக்கம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது .
ஒருவேளை அவர் போட்டியிட்டு வென்றால் பாஜகவுக்கு பல மடங்கு நன்மை கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை ஆனால் தோல்வியுற்றால் பாஜகவின் நிலை மேலும் மோசமாகிவிடும் .
அதற்கேற்றாற் போல் சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘அடுத்து தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார்’’ என தெள்ளத்தெளிவாக கூறிச் சென்றுள்ளார்.
இது குறித்து பாஜக தேசிய நிர்வாகிகள் கூறியதாவது : ராமர் கோயில் திறப்புடன் நேரடித் தொடர்புடையதாக ராமேஸ்வரம் உள்ளது. ராமர் பாலமும் அருகிலிருப்பதால், பாஜக களம் அமைக்க ராமநாதபுரம் சிறந்த இடமாக இருக்கும் .
ராமநாதபுரத்தில் பிரதமரே போட்டியிடுவதால் தமிழகத்தில் கூட்டணி இன்றி பாஜக தனியாகவே களம் காணும் . அதிமுக எத்தனை தொகுதிகளில் வென்றாலும் தேர்தலுக்கு பின் அக்கட்சியின் ஆதரவு எங்கள் அரசுக்கு இருக்கும். இதனால் பாரத பிரதமர் தாம் போட்டியிடுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக கூறியுள்ளனர் .
ஒருபக்கம் பாஜகவுடன் சேர்ந்துபோட்டியிட்டால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் கிடைக்காது என நினைப்பதால் அதிமுக தனித்துப் போட்டியிடவும் திட்டமிட்டு வருகிறது .
மறுபக்கம் தமிழகத்தில் பிரதமர் மோடியே போட்டியிட உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது . ஒருவேளை தற்போது வெளிவரும் செய்திகள் அனைத்தும் உண்மையானால் மக்களவை தேர்தலில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .