தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது.
“உதயாவும் சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை விட அதிகமாகச் சம்பாதித்துவிட்டனர். இப்போது அது பிரச்னையாகி வருகிறது. இதை எப்படி ஹேண்டில் செய்வது ? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என குவித்து அது தோராயமாக 30 ஆயிரம் கோடியாக இருக்கும்’’ என்று பழனிவேல் தியாகராஜன் சொல்வது போல அந்த ஆடியோ உள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆடியோ நேற்று மாலையில் இருந்து சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான பழனிவேல் தியாகராஜன் இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லியிருப்பாரா என்ற பொதுவான சந்தேகம் இருந்தபோதிலும், இந்த ஆடியோவைக் குறித்து பழனிவேல் தியாகராஜன் தரப்பில் இருந்து ஆடியோ வெளிவந்து ஒருநாளுக்கு மேலாகியும் இதுவரை எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை.
ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் அல்ல என்று கூட அவர் இதுவரை சொல்லவில்லை.
இது குறித்து முதலமைச்சரோ, அவருடைய மகனோ, மருமகனோ கூட எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ உண்மை என்று கருதும்பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரோ, குடும்பத்தினரோ நினைக்க வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை நடவடிக்கை எடுத்தால், மேலும் புதைந்து கிடக்கும் பல செய்திகள் வெளிவந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பழனிவேல் தியாகராஜன் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட அவரைப் போல பேசுவதற்கு துணிந்துவிடுவார்கள். அதைத் தடுப்பதும் பிரச்னையாகிவிடும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கக் கூடும்.
இந்த நிலையில்,பி.டி.ஆர். மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இருவரையும் சென்னைக்கு முதல்வர் அழைத்துள்ளதாகவும், அதன் பொருட்டு அவர்கள் இருவரும் இன்று மதியம் பிற்பகல் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.