வடசென்னை தொகுதிக்கு யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்று திமுக அதிமுக வேட்பாளர்களிடையே ஏற்பட்ட போட்டியால் அங்கு பரபரப்பு நிலவியது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் பங்குனி உத்திரம் திருநாளான இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வடசென்னை தொகுதிக்கான வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை மிண்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் செய்யச் சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.தேர்தல் விதிப்படி மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்க வேண்டும்.
Also Read : விதி மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையத்திடம் ஜெயக்குமார் வலியுறுத்தல்
ஆனால் கலாநிதி வீராசாமிக்கு பதிலாக அவரது உதவியாளர் வந்து டோக்கன் எண் 2 பெற்றுச் சென்றுள்ளார். ஆனால், அதிமுக வேட்பாளர் மனோ நேரடியாகவந்து டோக்கன் எண் 7 பெற்று காத்திருந்துள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அப்போது மனோ மனுத்தாக்கல் செய்ய சென்றபோது அங்கு கலாநிதி வீராசாமி அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோருடன் வந்ததால் இருதரப்பையும் போலீசார் அனுமதித்தனர்.அப்போது தங்களது வேட்புமனுவைத்தான் முதலில் ஏற்கவேண்டும் என்று கலாநிதி தரப்பு கூறியுள்ளது. அப்போது தாங்கள்தான் ஏற்கனவே வந்து காத்திருந்ததாக அதிமுக தரப்பு கூறி தங்களது மனுவை ஏற்கும்படி கூறியுள்ளனர்.
Also Read : justNow |மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அமைச்சர் சேகர்பாபு வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தியதால் அங்கு இருதரப்பினரும் ஆவேசமாகினர்.இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டாரவி தேஜா, ஆவணங்களின் படி அதிமுக வேட்பாளர் முன்கூட்டியே வந்ததாகத் தெரிவித்தார்.
ஆனாலும் டோக்கன் எண் படி எங்களது மனுவைத்தான் ஏற்க வேண்டும் என்று திமுக தரப்பு தேர்தல் நடத்தும் அலுவலரை மிரட்டும் தொணியில் பேசிக் கொண்டிருப்பதால், பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.