பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றம் (OPS Insist).
இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
“அண்மையில் பெருவெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் அனைவரும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : https://itamiltv.com/cheif-minister-mkstalin-pays-tribute-to-kuka-selvam-body/
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகை, பலருக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும், டோக்கனில் தொடங்கி ரொக்கப் பணம் வழங்குவது வரை ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதே சமயத்தில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் ரொக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாகும். பொங்கல் தொகுப்பாக சென்ற ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்ட இந்தச் சூழ்நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : https://itamiltv.com/kanimozhi-karunanidhi-has-requested-that-no-one-come-to-meet-me-on-my-birthday-is-going-to-be-celebrated-on-5th-january/
தற்போதைய நிலையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பொதுமக்களின் நியாயமான கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு, எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் தொகுப்பினை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார் (OPS Insist).