premalatha-ஒவ்வொரு கட்சியாக தங்கள் கூட்டணி கட்சியோடு தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து வரும் நிலையில், “இந்த பக்கமா..? அல்லது அந்தப் பக்கமா..?” என அரசியல் ஆர்வலர்களையும் குழப்ப நிலைக்கு ஆளாக்கி வருவது தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள்தான்.
கடந்த சில தினங்களாக அதிமுக தேர்தல் குழுவுடன் 2 கட்ட பேச்சு வார்த்தையை தேமுதிக, முடித்து விட்ட நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அழுத்தம் திருத்தமாக செய்தியாளர்களிடம் கூறி விட்டுச் சென்றனர் அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழுவினர்.
அதோடு, அதிமுக கூட்டணியில் 4 மக்களவை தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் தகவல்களும் பரவின. எனவே, இனி பாஜக – தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பில்லை” என அனைவருமே நம்பியிருந்த நிலையில்தான் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா.
இதையும் படிங்க: “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்..!” ஆளுநர் ஆர்.என்.ரவி மகளிர் தின வாழ்த்து
அப்போது பேசிய பிரேமலதா, “அதிமுகவும், பாஜகவும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதிமுக அலுவலகத்துக்கு எங்களது பேச்சுவார்த்தை குழுவினர் மரியாதை நிமித்தமாகவே சென்று வந்தார்கள். அதிமுகவிடம் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. பேச்சுவார்த்தை தொடரும்.
பலரும் கூறுவது போல பாஜகவுடன் எந்த திரைமறைவு பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. மாநிலங்களவை சீட் தர அதிமுக மறுத்ததாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது. அனைத்து கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதால் எங்கள் கட்சிக்கும் கேட்கிறோம்.
இதையும் படிங்க:JustNow | குடிநீரில் கார் கழுவுவதற்கு தடை
மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. இரு கட்சிகளிடமுமே எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்” என்றார் பிரேமலதா.
ஆக மொத்தத்தில், ‘எத்தனை இடத்தில் நிற்க போகிறோம்?, எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறோம்?’ என அரசியல் கட்சிகள் அனைத்துமே ஆலோசனையில் இருக்கும் நிலையில், “எங்க டார்கெட்டே ராஜ்யசபா சீட்டு மட்டுந்தாங்க..!” என்ற பிரேமலதாவின்(premalatha) பேச்சு அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது.