திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி பளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திராவிட மணி (40). இவர் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து திராவிட மணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை கைதியாக திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Also Read : மக்களின் உயிரோடு விளையாட கூடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்
இந்தநிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் திராவிடமணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவர் பரிசோதித்து விட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திராவிடமணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
திராவிட மணியின் இறப்பு குறித்த செய்தி அறிந்த அவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு நேற்று இரவும், இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .