உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பாஜக மீது அதிருப்தி நிலவுவதாகவும், தங்களை காப்பாற்றிக்கொள்ள கொடிகளை வாரி இரைப்பதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டத்தை திரட்டுவதற்கு அரசுப்பணத்தை அம்மாநில அரசு செலவிடுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருக்கிறது. இச்செய்தியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
ஊரடங்கு காலத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். அப்போது, மாநில அரசு அவர்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், இப்போது மோடி, அமித்ஷா பொதுக்கூட்டங்களுக்கு ஆள் திரட்ட பொது மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பயன்படுத்துகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜனதா மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே, தங்களை காப்பாற்றிக்கொள்ள கோடிகளை வாரி இறைக்கிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.