சென்னை குரோம்பேட்டையில் மதிமுக சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது.
இந்த நீட் தேர்வுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தது.
அதன்படி திமுக அரசு சட்டப்பேரவையிலும் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், ஆளுநர் அந்த மசோதாவில் கையெழுத்திடாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் குரோம்பேட்டையை சேர்ந்த, மருத்துவர் கல்லூரி மாணவன் ஜெகதீஸ்வரன்(19), நீட் தேர்வு தோல்வி காரணமாக மனமுடைந்து உயிரிழந்தார். கடந்த 2 ஆண்டுகளாக நீட்தேர்வு எழுதியும், அரசு ஒதுக்கீட்டில் சீட்டு கிடைக்காததால், தற்கொலை செய்து கொண்டார்.
மகனின் இறப்பை தாங்க முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் மறுநாள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் மதிமுக சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பரான மருத்துவர் கல்லூரி மாணவன் பயாஸ்தீன், நீட் தேர்வு குறித்து மாணவர்களின் குமுறலை வெளிப்படுத்திய தன்னை, மத ரீதியாக விமர்சனம் செய்வதாக அவர் வேதனையுடன் கூறினார்.