சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19- தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் உள்ளது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று இரவு 7 மணியளவில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறப்படுகிறது.

எனினும், விஜய் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயை புதுச்சேரி முதல்வர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.