வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கை சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது.இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி 11 பேருக்கு DNA சோதனை நடத்த பரிந்துரைத்தனர். ஆனால் அதில் மூன்று பேர் மட்டுமே DNA சோதனைக்கு உட்படுத்தி கொண்ட நிலையில் மற்ற 8 பேர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 1 ஆம் தேதி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி 8 பேரும் உடனடியாக ஆஜராக சம்மன் அனுப்பியது.
அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான 8 பேரிடமும் DNA பரி சோதனை எடுக்கப்படுவதற்கான விளக்க கடிதத்தை நீதிபதி வழங்கினார்.ஆனால் அந்த கடிதம் ஆங்கிலத்தில் இருந்ததால் உடனடியாக பதில் அளிக்க முடியாது என 8 பேரும் கூறியதால் ஒரு நாள் அவகாசம் வழங்குமாறு கூறினர்.
இதற்க்கு நீதிபதி நாளை மறுநாள் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து இன்று 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.