சுகாதார அமைச்சகத்தின் முடிவை ‘பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் தரம் நம் கண் முன்னாலேயே இந்த அளவிற்கு தாழ்த்தப்பட்டதை ஏற்றுக் கொள்ளவோ, தாங்கிக் கொள்ளவோ இயலவில்லை.
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைச் செழிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு தவறான முடிவை மத்திய சுகாதாரத்துறை எடுத்திருக்கக் கூடாது;
இது ஒரு வரலாற்று பிழை. சில சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்று சொன்னால் அந்த மருத்துவ கல்லூரிகளின் இடங்களைக் குறைப்பதுத்தான் மத்திய அரசின் சுகாதாரத் துறை மேற்கொண்டிருக்க வேண்டிய பணி ஆகும்.
ஒரு சுயநிதி மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு அவை நிரப்பப்படவில்லை என்றால் அதை அடுத்த ஆண்டு 25 ஆகக் குறைப்பதற்கு பதிலாக அந்த 50 இடங்களையும் நிரப்புவதற்கு தரத்தைக் குறைத்து நீட் தேர்வில் zero percentile முறையைப் பின்பற்ற தேசிய மருத்துவ கவுன்சில் முடிவு செய்து இருக்கக் கூடாது.
தமிழகத்தில் ஏறக்குறைய 4000-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டப்படிப்புகள் உண்டு. தமிழகத்தில் தான் அதிகமான சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உண்டு. அந்தக் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் தகுதி வாய்ந்த மாணவர்களுக்குக் கல்வி கட்டணத்தை 30 லட்சம் – 50 லட்சம் என்பதை வெறும் 5 லட்சம், 10 லட்சம் எனக் குறைத்து இருந்தால் தகுதியான மாணவர்கள் கிடைத்து இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வுக்கு சாவு மணி அடிக்கக்கூடிய வகையில் முதுநிலை பட்டப்படிப்பில் zero percentile என்ற நிலை வந்திருக்காது.
வெளிப்படையாகப் பார்த்தால் நீட் தேர்வு வடிகட்டக்கூடிய படிப்பு என்று பிரச்சாரம் செய்யக்கூடியவர்களின் வாயை அடைக்க வேண்டுமென்றால் அது உதவிகரமாக இருக்கலாமே தவிர, உண்மை அதுவல்ல.
குறிப்பாக நீட் தேர்வுக்காக ஒரு வருடம், இரண்டு வருடம் படித்துத் தேர்வு எழுதக்கூடியவர்களையும், வெறுமனே வந்து வெற்றுத்தாளை கொடுத்துவிட்டு நீட் தேர்வுக்கு ஆஜராகி விட்டோம் என்ற ஒரு சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு பணப்பெட் டியை எடுத்துக் கொண்டு போய் சீட்டு வாங்க கூடியவர்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க மட்டுமே zero percentile உதவிகரமாக இருக்கும்.
மொத்தத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளில் zero percentile கொண்டு வந்தது அறிவுபூர்வமான செயல் அல்ல. இது பொன் முட்டையிடும் வாத்தை வயிற்றைக் கிழித்து கொன்றதை போல பல கோடான கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவ துறையின் தரத்தைக் குறைத்து மருத்துவ துறையின் மகிமையை அழிப்பதாகும் என தெரிவித்துள்ளார்