மழை வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் இருக்கக்கூடிய பொதுமக்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதும் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதுமே அரசின் முதல் பணி என தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் குடியிருப்பு மற்றும் பிரதான சாலை அனைத்துமே மழை நீரால் வெள்ளம் போல் சூழ்ந்து காணப்படுகிறது. ஆங்காங்கே மழை நீரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு உணவு அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதியில் இருந்து தக்காளி சாதம் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருந்து வண்டியில் ஏற்றி சென்று உள்ளனர்.
மேலும், தூத்துக்குடி நகரமே வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டதால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மின் மயானம் போல் தூத்துக்குடி இருளில் மூழ்கியது. மேலும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சிக்கி வாகனத்தை பழுதுபார்க்க இயலாமல் அங்கேயே விட்டு செல்லும் ஒரு அவல நிலை தான் ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நின்றும் குறையாத வெள்ளம் இயல்பு நிலைக்கு மாற மக்கள் பரிதவித்துவரும் நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேற்குப் பகுதிகளில் மலை வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான முத்தம்மாள் காலனி பகுதியை இன்று பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.
மக்களை மீட்பதற்காக பல்வேறு பகுதிகளில் அரசு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார். இதனிடையே மழை வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ வா வேலு டிராக்டரில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்.