சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தால், மாலை நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அதே போன்று நேற்றும் மதிய நேரம் வரை வெயில் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் மேகமூத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, அண்ணாநகர், திருவான்மியூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
இதேபோல புறநகர் பகுதிகளான வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் குரோம்பேட்டை, பெருங்களத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, பெரியபேட்டை, பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இரவு வேளையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
அதே போல் தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து, குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஏற்கனவே கனமழையால் வட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.