பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து பேசினார்.
அதில் தற்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது என்றும் அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்திருந்த அவர், அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் பணிக்குழு, மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினராக உள்ள வி.கே. பால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அலுவலர்களும் இந்த பணிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
பெண்கள், முதல்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அவர்களின் வயது குறைந்தப்பட்சம் 21ஆக இருக்க வேண்டும் என பணிக்குழு பரிந்துரை செய்தது. திருமணத்தை தாமதப்படுத்துவதன் மூலம் பொருளாதார, சமூக, சுகாதார ரீதியாக குடும்பம், குழந்தைகளின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறி இருந்தது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.