பசுவதை செய்பவர்களை கொலை செய்யுங்கள்; யாராக இருந்தாலும் சொல்லுங்கள்.. நான் ஜாமீனில் எடுக்கிறேன். இதுவரைக்கும் ஐந்து பேரை கொலை செய்திருக்கிறோம். என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜா பேசிய பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பசுவின் பெயரால் கொலை செய்யும் போக்கை பாஜக ஆதரவுடைய இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து செய்துள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது மேலும் அதிகரித்துள்ளது. அதுவும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பின் இது மேலும் அதிகரித்துள்ளது. 2015 ஆண்டு மே 30ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்திரியில் 70 வயதான முகம்மது அக்லக் என்ற முதியவரை அடித்தே கொன்றார்கள் பசுப் பாதுகாவலர்கள். அதே ஆண்டு அக்டோபர் 9ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.
2016 ஜனவரி 13ல் மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2016 மார்ச் மாதம் 18ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி 3 இஸ்லாமிய இளைஞர்களை பசு பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிட்டு படுகொலை செய்தனர் இந்துத்துவ அடிப்படைவாதிகள்.
அதே ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார். 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
2016 ஜூன் 10ம் தேதி ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் 2 பேரை மாட்டு சாணத்தை சாப்பிட வைத்து கொடுமை செய்தனர். 2016 ஆம் ஆண்டு ஜூலை 15ல் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ஊனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர். 2016ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுவின் பெயரால் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.
2016ம் ஆண்டு ஆகஸ்டு 24ல் ஹரியானா மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பொது இடங்களில் அத்துமீறல் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி ராஜஸ்தானில் 2 பேர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டனர்.
அதே ஆண்டு ஜூன் 23 தேதி டெல்லி அருகில் மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறி 4 பேர் தாக்கப்பட்டனர். இப்படி தற்போது வரையிலும் பசுவின் பெயரால் ஏதாவதொரு இடங்களில் தாக்குதல் சம்பவத்தை பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ அமைப்பினர் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் தான், ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
ராஜஸ்தானில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ். இவர் பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். நான் ஜாமீனில் எடுக்கிறேன் என்று பேசி இருக்கிறார். மேலும் பேசியுள்ள அவர், இதுவரைக்கும் ஐந்து பேரை கொலை செய்திருக்கிறோம் என்றும் பேசியுள்ளார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ராஜஸ்தான் போலீசார் அவரின் பேச்சுக்கு வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன .
மேலும் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது . மத ரீதியிலான பயங்கரவாதத்தை பாஜக பரப்புகிறது என்பதை நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் தேவை இருக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பாஜக முன்னாள் எம்எல்ஏவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் பேச்சுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.