கன்னட திரைப்பட நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடிக்கும் படம் ‘777 சார்லி’ செல்லப்பிராணியான நாய்க்கும் அதனை வளர்க்கும் உரிமையாளருக்கும் இடையேயானஉறவை உணர்வுகளுடன் காட்சிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தை கிரண் ராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 777 சார்லி படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அந்தப் படத்தின் நாயகன் ராக்ஷிட் ஷெட்டி தன்னுடைய ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “ரஜினிகாந்த் சாரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 777 சார்லி படத்தை அவர் நேற்று இரவு பார்த்து பிரமித்து உள்ளார்.
படம் தரமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், படத்தின் ஆழமான வடிவமைப்புகள் குறித்தும், குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் குறித்தும் வியந்து பேசினார். அதாவது ஆன்மிக ரீதியான அந்த க்ளைமேக்ஸை அவர் நெகிழ்ந்து பேசினார். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படியான வார்த்தைகளை கேட்பது அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
777 சார்லி படத்தை சமீபத்தில் திரையரங்குக்கு சென்று பார்த்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இப்படத்தை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அனைவரும் பார்க்கவேண்டிய படம். படத்தில் நடித்திருக்கும் நாய் கண்ணாலேயே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது.ஏற்கெனவே நாய்களை பற்றிய படங்கள் அதிகமாக வந்திருந்தாலும் இந்த படம் அதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது என்று உணர்ச்சிவசமாக தெரிவித்து உள்ளார்.