திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் போட்டோ ஷூட் நடத்திய சம்பவம் பெரும் பூதாகரமாகியுள்ள நிலையில், நயன்தாராவின் செயலுக்கு இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம். இவர்கள் திருமணம் கடந்த 9 ஆம் தேதி வெகுவிமர்சியாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலகத்தை சார்ந்த முக்கிய நபர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
மேலும், திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தனர். திருப்பதி மலையில் தம்பதிகள் ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு வெளியே காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று இருவரும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். தற்போது இது குறித்து தான் சமூக வலைதளங்களில் விவாதமாகவே மாறியிருக்கிறது.
தேவஸ்தானம் விளக்கம்:
இந்நிலையில் இதையறிந்த தேவஸ்தான நிர்வாகம் கூறும்போது, நடைபெற்ற தவறுக்கு யாரும் காரணம் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு போட்டோ ஷூட் நடத்த தேவஸ்தானம் இடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இது போல் யாரும் கோவில் உள்ளே போட்டோ ஷூட் நடத்தியது கிடையாது.
இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்கள் தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவற விட்டனர் என்று கூறி இருக்கிறது. இந்த நிலையில், தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டு விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் திருமணத்தை நடத்தி இருந்தோம். எங்கள் திருமணம் முழுமையாக நிறைவடைய, திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வந்தோம். இந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பி கோவிலுக்கு வெளியே போட்டோஷூட் நடத்தினோம்.
இதனால் திருப்பதியிலேயே திருமணம் நடந்தது போல் உணர்ந்தோம். ஆனால் மக்கள் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோவில் வளாகத்தை விட்டு வெளியேறிய போதும், போட்டோ எடுக்கும் போது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை. தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை, இதனால் பக்தர்கள் புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் இந்த செயலை கண்டித்துள்ள இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் திருப்பதி ஒன்றும் சர்ச் இல்லை செருப்பணிந்து செல்வதற்கு, இன்று நயன்தாராவை விட்டால் நாளை மற்ற நடிகைகள் ஷூ போட்டு செல்வார்கள். அதனால் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வாரா? என்று கடுமையாக சாடியுள்ளார்.