அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிலம் வழங்க வேண்டிய அரசு, அவர்கள் நிலத்தை பறிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என [பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:
சேலம் மாவட்டம் கணவாய்ப்புதூர் பகுதியில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு சொந்தமான நிலங்களை, அரசுக்கு சொந்தமான நிலங்கள் என்று அறிவித்து, கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசின் வருவாய்த்துறை ஈடுபட்டிருக்கிறது. அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிலம் வழங்க வேண்டிய அரசு, அவர்கள் நிலத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்குட்பட்ட கணவாய்ப்புதூர், கேதுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் 382 ஏக்கர் நிலங்களில், அங்குள்ள நாராயணபுரம், கே.மோரூர், லேண்ட் காலனி, கே.என்.புதூர், எஸ்.காந்திநகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 500-க்கும் கூடுதலான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயம் செய்தும், வீடு கட்டி குடியிருந்தும் வருகின்றனர். ஆனால், திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அந்த நிலங்களை அளவீடு செய்து, கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதைக் கண்டித்து 5 ஊர் மக்களும் கடந்த மாதம் 11-ஆம் நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியும் பயனில்லை. நிலங்களை அளவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வருவாய்த்துறையினரின் நடவடிக்கை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது, சட்டத்திற்கும், நியாயத்திற்கும் முற்றிலும் எதிரானது ஆகும். உண்மையில் அந்த நிலம் 5 கிராம மக்களுக்கு சொந்தமானது ஆகும். அவர்களின் முன்னோர்கள் தான் 1938-ஆம் ஆண்டில் நில குடியேற்றக் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி நடத்தினார்கள். இப்போது வருவாய்த்துறையினரால் அளவிடப்படும் 382 ஏக்கர் நிலங்களும் நிலக் குடியேற்ற சங்கத்திற்கு சொந்தமானதாகும்.
சங்க உறுப்பினர்கள் 474 பேர் அந்த நிலத்தில் விவசாயம் செய்தும், வீடுகளை கட்டியும் வாழ்ந்து வந்தனர். அந்நிலங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தான் இப்போது 500-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. நிலங்களின் மீதான அவர்களின் உரிமையும் தொடர்கிறது.
நிலங்களை நிர்வகித்து வந்த நில குடியேற்றக் கூட்டுறவு சங்கம் தவிர்க்க முடியாத காரணங்களால் 1986-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே, கூட்டுறவு சங்கத்தின் நிலங்களை எந்த உறுப்பினர்கள் பயன்படுத்தி வந்தார்களோ, அந்த நிலங்களை அவர்களின் பெயருக்கே பட்டா செய்து வழங்க சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நிலங்களை, அவற்றை பயன்படுத்தி வந்தவர்களுக்கே பட்டா செய்து தர வேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் நிலங்களின் உரிமை கொள்கை அளவில் 5 கிராம மக்களுக்கு மாற்றப்பட்டு விட்டது.
ஆனால், இந்த விவரங்கள் எதையும் நிலங்களை பயன்படுத்தி வந்த மக்களுக்கு கூட்டுறவு சங்கம் முறைப்படி தெரிவிக்கவில்லை. அது மட்டும் தான் இந்த விவகாரத்தில் நிகழ்த்தப்பட்ட தவறு ஆகும். இதிலும் கூட நிலங்களை பயன்படுத்தி வந்த 5 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவற்றைப் பற்றியெல்லாம் எதுவும் அறியாத அந்த மக்கள், சம்பந்தப்பட்ட நிலம் தங்களுக்கு சொந்தமானது என்ற நம்பிக்கையில் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த நிலத்திற்கான கந்தாயத்தை அவர்கள் செலுத்தி வந்ததுடன், தங்களின் பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கும், வீடுகளுக்கு மின்சார இணைப்பையும் பெற்றுள்ளனர். 2008-ஆம் ஆண்டில் தான் கந்தாயம் பெற அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அப்போதும் கூட, அதற்கான காரணம் என்ன? என்பதை தெரிவிக்கவில்லை. அதனால், எதற்காக கந்தாயம் பெறுவதற்கும், மின் இணைப்பு வழங்குவதற்கும் அதிகாரிகள் மறுக்கிறார்கள்? என்பதை அறியாமலேயே, தங்களுக்கு நீதி கேட்டு 5 கிராம மக்களும் போராடி வந்தனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் போராடிய நிலையில் தான், 2018-ஆம் ஆண்டில் அந்த நிலங்கள் அனைத்தும் தரிசு புறம்போக்காக மாற்றப்பட்டு விட்டதாக அவர்களுக்கு தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், அதன் பிறகும் கூட நிலங்களை 5 கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர். சில வாரங்களுக்கு முன் அந்த நிலங்களை அளவிடுவதற்காக அதிகாரிகள் வந்த போது தான் நிலைமையின் தீவிரம் மக்களுக்கு தெரியவந்துள்ளது.
1986-ஆம் ஆண்டில் கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்ட போதே, அதன் நிலங்களை, அவற்றை பயன்படுத்தியவர்களுக்கே பட்டா செய்து கொடுத்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. அதிகாரிகள் நிலையில் இழைக்கப்பட்ட தவறுக்கு அப்பாவி பொதுமக்களை பலிகடா ஆக்கக்கூடாது. அவர்களுக்கு அந்த நிலங்களைத் தவிர வேறு வாழ்வாதாரமும், வாழ்விடமும் கிடையாது.
கணவாய்ப்புதூர் பகுதியில் உள்ள 382 ஏக்கர் நிலங்களை அங்குள்ள மக்கள் பரம்பரை பரம்பரையாக 85 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தை அவர்கள் பெயருக்கு பட்டா செய்து கொடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சிலரின் தவறுகளால் அது செயல்படுத்தப்படவில்லை என்பதற்காக, 5 கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களை பறிக்கக் கூடாது. அந்த நிலங்களை அளவிடும் பணிகளை உடனடியாக நிறுத்தி விட்டு, அந்த நிலங்களை அவற்றை பயன்படுத்தி வரும் மக்களுக்கு பட்டா செய்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்புல் தெரிவிக்கப்பட்டுள்ளது.