சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் மூன்று நாட்களாகியும் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது..
“வங்கக்கடலில் உருவாக மிக்ஜம் புயலால் சென்னையில் கடுமையான மழை பெய்தது இரு நாட்கள் மட்டும் தான். டிசம்பர் மூன்றாம் தேதி பகலில் விட்டு, விட்டு பெய்த மழை, அன்று இரவு முதல் நான்காம் தேதி இரவு வரை இடைவிடாமல் மழை பெய்தது. கடந்த காலங்களில் இதைவிட கூடுதலான மழை சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பெய்திருக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை தடுக்க முடியாது என்றாலும், குறைத்திருந்திருக்கலாம். ஆனால், திட்டமிட்டு செயல்பட தமிழக அரசு தவறிவிட்டது.
மழை முற்றிலுமாக ஓய்ந்து மூன்று நாட்களாகிவிட்ட நிலையில்,சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடந்த இரு ஆண்டுகளில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டனவோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் கடந்த காலங்களை விட மிக அதிக அளவில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அதற்கு காரணம் ரூ.4000 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை.
மழை மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் கூறப் பட்டாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, மக்களின் துயரங்களைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பிற மாவட்டங்களில் இருந்து இன்னும் கூடுதலான பணியாளர்களை வரவழைத்து, அதிக எண்ணிக்கையிலான இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மேற்பார்வை பணிக்கு அனுப்ப வேண்டும். சென்னையில் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக இயல்பு நிலையை திரும்பச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார இழப்பையும் சந்தித்துள்ளன. சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.