நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அனிமல்’ திரைப்படம் வெளியான 17 நாட்களில் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ரன்பீர் கபூர் நடித்துள்ள “அனிமல்” திரைப்படம் விரைவில் ரூ.900 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ப்ரீதம், விஷால் மிஸ்ரா, மனன் பரத்வாஜ், ஷ்ரேயாஸ் பூரணிக், ஜானி, ஆஷிம் கெம்சன் உள்ளிட்டோர் படத்துக்கு இசையமைத்துள்ளனர். டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். அனிமல் படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தந்தை – மகன் உறவைப் பேசும் இப்படம் ஆணாதிக்க அம்சங்கள் நிறைந்த டாக்சிக் படம் என்றும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.
தற்போது, படம் வெளியாகி 17 நாட்கள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் அதிக வசூலை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.