மீண்டும் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுத்ததற்கு காரணம் இதுதான்.. – வானிலை மைய அதிகாரியின் `ஷாக்’ தகவல்

தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சென்னையில் முக்கிய வியாபார மையமாக உள்ள தி.நகரில் மழை வெள்ளம் தேங்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகே நிலைமை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது.

மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு சென்னை மற்றும் புறகர் பகுதிகள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி குறிப்பிட்டுள்ளதாவது;

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த 6-ந்தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது.

அதே போல் நாளையும் சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு வந்துள்ளதாகவும்,

இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் எனவும், சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த காற்றழுத்த தாழ்வு நாளை சென்னைக்கு அருகே தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரை நோக்கி நெருங்கி வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யவும் வாய்ப்புண்டு.

சென்னையில் ஏற்கனவே மழை பெய்தது போல் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என தெரிகிறது.

இதன் காரணமாகவே வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts