தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் 5 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த போதிலும், அவர் தொடர்ந்து ஆளுநராக நீடித்து கொண்டிருக்கிறார். தற்போது வரை புதிய ஆளுநர் நியமனம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் சூழலில் ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பலமுறை குடியரசு தலைவரிடமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவியின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தது.
ஆர்.என் ரவி வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் 2 ஆண்டுகளும், தமிழகத்தில் 3 ஆண்டுகளும் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த நிலையில், ஜூலை 31ஆம் தேதியுடன் ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இன்னுமும் அவர் ஆளுநராக தொடர்வது ஏன் என்ற கேள்விகளை கிளப்புகிறது.
இது தொடர்பாக டெல்லி வட்டாரம் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் 156 பிரிவின் படி ஆளுநரின் பதவி காலம் நிறைவடைந்த பிறகும் ஒருவரால் ஆளுநராக பணியை தொடர முடியும். இதற்கு குடியரசு தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது கட்டாயமில்லை” என கூறப்பட்டுள்ளது.
இதனால், புதிய ஆளுநரை நியமிக்கும் வரையில் ஆர்.என் ரவி ஆளுநராகவே தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி டெல்லி சென்ற ஆளுநர் ரவி, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் டெல்லிக்கு பறந்துள்ளார்.
டெல்லி பயணத்தின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும், ஆளுநர் பதவி நீட்டிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.