ஒரு மாநில மக்களை இழிவுபடுத்திய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டிக்காதது ஏன்? என்று வானதி ஸ்ரீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி ,”ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். எத்தனயோ ஆளுநர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த ஆளுநர் என்ன செய்கிறார் என்றால், வேண்டுமென்றே அரசை வம்பு சண்டைக்கு இழுக்கிறார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள். தவறாக நினைக்க வேண்டாம். நான் ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்.
நாகாலந்தில் நாய் இறைச்சியை திண்பார்கள். அவர்களுக்கே அந்த அளவிற்கு சொரணை இருந்து, இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு உணவு உண்ணும் தமிழனுக்கு எந்த அளவிற்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் உணர வேண்டும்” என ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டித்து பேசியிருந்தார். ஆர். எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
திமுகவினர் தொடர்ந்து மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.
ஆளுநர் திரு. ஆர்.என் ரவியை விமர்சனம் செய்வதாக கூறி ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், என கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஓரு மாநில மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ். பாரதியை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதை இண்டி கூட்டணி தலைவர்கள் வரவேற்கிறார்களா ? இல்லை என்றால் இன்னும் அவரைகண்டிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.