பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜியின் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 66. கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஆர்.எஸ். சிவாஜி மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், சத்யா, ஜீவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் .
எப்போதும் திருதிருவென முகத்தில் புன்னகையுடன் மக்களை மகிழ்வித்து வந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்திற்கும் , திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜியின் மறைவுக்கு ரசிகர்கள் திரையுலகினர் என பலரும் நேரிலும் இணையத்திலும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பதிவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.