சமூக வலைதளங்களில் மதபிரிவினையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதாக பாபநாசம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரம் நகர ஆர்.எஸ்.எஸ். செயலாளர் கார்த்திக் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இந்து-முஸ்லிம் மத கலவரத்தை தூண்டும் விதத்தில் வீடியோ, மற்றும் எழுத்து பூர்வ பதிவுகள் பதிவு செய்தார் கார்த்திக் என்பது புகார். கார்த்திக்கை நேற்று இரவு கைது செய்த போலீசார் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜர்படுத்தினர்.
குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் நீதிபதியிடம், காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் என்னை கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் உன் மீது குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டி கையெழுத்து வாங்கியதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர் கார்த்திக்கை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே கார்த்திக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதேபோல் முகநூலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட நாகப்பட்டினத்தை அடுத்துள்ள கீச்சாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். அதிமுகவை சேர்ந்த இவர் சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வசைபாடி அவரது முகநூல் பக்கத்தில் வீடியோக்கள் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோக்களை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பரப்பியும் விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நாகை மாவட்ட திமுகவினர் கொதித்தெழுந்தனர்.
இதையடுத்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சோமு என்பவர் கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சேவாபாரதி பகுதியில் ஒளிந்திருந்த கிருஷ்ணமூர்த்தியை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.