எண்ணூர் புதிய அனல் மின்நிலைய விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் ஆளும் கட்சி எம்எல்ஏ அராஜகம் செய்ததாக SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
எண்ணூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அமைத்து வரும், அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று எர்ணாவூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. மிகப்பெரும் அளவில் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மக்கள் வருவார்கள் என்கிற நிலையில், மிகச்சிறிய அரங்கை அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அதோடு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்த கூட்டத்தில், ஆளும் கட்சியை சேர்ந்த குறிப்பாக திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி. சங்கர் ஆளும் கட்சி கூட்டத்தை போன்று, “வெளியூர்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” எனவும், “வெளியூர் காரர்களுக்கு பேசுவதற்கு அனுமதில்லை” எனவும் பேசினார். ஆனால், கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டிய ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மவுனமாக இருந்தனர்.
Also Read : 500+ பேர் விலகல் – கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க நிர்வாகிகள் அறிவிப்பு..!!
இந்த திட்டத்திற்கு ஆதரவான ஆட்களைக் கொண்டு அந்த அரங்கை நிரப்பி, எதிராக கருத்து சொல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலையும், திட்டத்திற்கு எதிர் கருத்து சொல்பவர்களை அச்சுறுத்தும் நிலை அங்கு திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இருப்பினும் அவற்றை கடந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் போராடி, மக்களின் சார்பாக திட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டார்.
இன்றைய கூட்டம் முழுக்க முழுக்க கண்துடைப்பு கூட்டமாகவே நடைபெற்றுள்ளதை நடந்த நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. ஆகவே, இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.