“விஜய் மக்கள் இயக்கத்தை கலைச்சிட்டோம்” : நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்!

Spread the love

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை பதிவு செய்தார்.

தலைவராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.இந்த அறிவிப்பில் விஜய்க்கு உடன்பாடு இல்லை என அப்போது தகவல் வெளியாகின

இந்நிலையில் நடிகர் விஜய் தரப்பில் , அவரது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 2021 பிப்ரவரி 28ஆம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Spread the love
Related Posts