நைஜிரியாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம் மற்றும் புற்றுநோய் உள்நோய் மையம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பல்வேறு அறிவிப்புக்கள் குறித்து பேசினார்.
மேலும் தமிழ்நாட்டில் 69 அரசு மருத்துவமனைகளில் 79 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளன என்றும் அதன் மூலம் நாளொன்றுக்கு 1,88,500 பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கூடுதலாக 20 ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மையங்கள் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இரண்டு நாள்களுக்கு முன் நைஜிரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கும் அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் எஸ்-ஜீன் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அதனால் அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களின் பரிசோனை முடிவுகள் இன்று மாலை அல்லது நாளை தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்ட அதிகாரிகள், உடனிருந்தனர்.