நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக இருந்து வந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக தீவுத் திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்று கேப்டன் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கு இடையில் நெரிசலில் சிக்கி விஜயகாந்தின் உடலை கடைசியாக ஒருமுறை பார்க்க வந்த விஜய், அருகில் இருந்த பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் விஜய் கேப்டனின் முகத்தை 10 நிமிடங்கள் பார்த்துவிட்டு கண்ணீருடன் அங்கிருந்து சென்றார்.
இந்நிலையில் நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்படுவது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய்யின் பின் பக்கத்தில் இருந்து வரும் செருப்பு, விஜய்யில் தோளில் உரசிக்கொண்டு செல்வது போல் காணப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் காரில் புறப்படுவதற்கு சென்ற போது, அவரின் மீது செருப்பு வீசப்பட்டாதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.