தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
“ஜேஎன்1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலகமெங்கும் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் இந்த புதிய வகை தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டதாகவும், கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 34 பேரில் 3 பேர் உயிரிழந்ததாகவும் வெளிவரும் செய்திகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜேஎன்1 வைரஸ் வீரியம் குறைவுதான் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நலம் குன்றி காணப்படுகிறதே தவிர உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், உலக சுகாதார அமைப்பு கொரோனா பரவல் குறித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியதை கருத்தில் கொண்டு, கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருப்பது அவசியம்.
தமிழக அரசும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.