காலை நேரத்தில் மதுக்கடைகளை திறக்கும் ஆலோசனையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கட்டட வேலை உள்ளிட்ட கடின வேலை செய்வோரைக் கருத்தில் கொண்டு காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், குறைந்தபட்ச அளவாக 90 மி.லி அளவுக்கு மது விற்பனை செய்ய உள்ளதாகவும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கையும், போதை பொருள் பயன்பாடற்ற மாநிலமாக உருவாக்கவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருவதுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 500 மதுக்கடைகளை மூடிவிட்டு, அந்த வருவாயை காலை நேரத்தில் கடையை திறந்து சமன்செய்து கொள்ளலாம் என தமிழக அரசு சிந்திப்பது நியாயமற்றது.
போதை பொருட்களை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக விற்பனை செய்ய இயலுமா? மதுவை கட்டட வேலை உள்ளிட்ட கடின வேலை செய்பவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக, காலையிலேயே மதுவிற்பனை செய்ய இயலுமா? ஏற்கெனவே தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறைந்துள்ள சூழலில், இவ்வாறாக மதுபானக் கடைகள் திறந்திருந்தால் மதுவை அருந்தி பணிக்கு செல்பவர்கள் விபத்தில் சிக்கியோ, பணிச்சுமை கூடுதலால் கவனமின்றி ஏதேனும் பாதிப்போ ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை ஆலோசனை செய்தவர்கள் சிந்திக்கவில்லையா?
தற்சமயம் மது விற்பனையை அதிகரிப்பதற்கு என்ன அவசியமும், அவசரமும் அரசிற்கு நேர்ந்தது? மது அருந்துவோரின் குடும்பத்தில் உள்ள பெண்களும், குழந்தைகளும் நிர்கதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டால் யார் பொறுப்பேற்பது? நல்ல சமூக கட்டமைப்பிற்கு குடுபங்கள் ஆரோக்கியமான சூழலில் வளர்ச்சியடைய வேண்டியது அவசியம். மாறாக குடும்பங்களை அழிக்கும் குடியை அரசு ஊக்குவிப்பது முறையற்றது.
கொரோனா சமயம் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது போல, அதிகபட்சம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்தேன்.
தமிழ்நாடு முழுவதும் மதுவால் மரணித்தவர்களின் புள்ளிவிவரத்தையும், அவர்களது நிர்கதியற்ற குடும்பத்தாரின் நிலையையும், மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும், மதுவால் ஏற்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் ஆகியவற்றை சற்று சிந்தித்திருந்தால் இத்தகைய எண்ணம் தோன்றியிருக்காது.
மனித மூளையை சலவை செய்து. சமூக குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமான மது விற்பனையை மேலும் படிப்படியாக குறைப்பது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கலாமே தவிர. பொருளாதார தேவைக்காக மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து மேலும் மது விற்பனையை அதிகரிக்க நேர்ந்தால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.