தமிழகத்தை இரண்டாக பிரிப்போம் என்ற பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு தமிழகத்தை பிளவுப்படுத்தும் நோக்கில் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
”மாநில சுயாட்சிக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகள் மீண்டும் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் கையிலெடுத்த தீவிர மாநில சுயாட்சி போராட்டத்தை நோக்கி சென்றுவிடும் என்று திமுக எம்.பி. ஆ.ராசா அவர்கள் ஒன்றிய பாஜக அரசுக்கு சுட்டிக்காட்டி பேசியதை திரித்து, தமிழகத்தை பிளவுப்படுத்தும் பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.
பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆ.ராசா கூறவந்த செய்தியை திசைதிருப்பி, தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம் எனவும், ஏனென்றால் தாங்கள் அதற்கான இடத்தில் இருக்கிறோம் என்றும், பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் பேசினார். இந்த பேச்சு அதிகாரத் திமிரை காட்டுவதோடு, பாஜக ஏற்கனவே பேசிவரும் கொங்குநாடு , வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்ற பிளவு பிரச்சாரத்தின் ஒருபகுதியாகவும் தெரிகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றிய இணை அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பதவியேற்பதற்கு முன்பாக, ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அமைச்சர்கள் பற்றிய குறிப்பில் எல்.முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு என்று இருந்தது. ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ குறிப்பிலேயே கொங்கு நாடு என்று இதுவரையில் இல்லாத புதிய நடைமுறை திணிக்கப்பட்டது அப்போது பெரும் கண்டனத்திற்குள்ளானது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வரும் சூழலில், மாநிலம் சார்ந்த பல்வேறு இழந்த உரிமைகளை மீட்கவும், தமிழகத்தின் பொருளாதார சூழலை மேம்படுத்தவுமான ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளவும், அதை நோக்கிய செயல்திட்டங்களை வகுப்பதற்கான ஆரோக்கியமான சூழலை நோக்கி நகரவேண்டிய தமிழகத்தை, இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய ஆபத்தான போக்கை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அனைத்து ஜனநாயக சக்திகளும் இதனை கண்டிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.