தமிழக காவல்துறையின் ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜி திட்டத்தின் மூலம் ஜனநாயக தேசத்தை காவல்துறையின் கண்காணிப்பு தேசமாக மாற்றுகிறதா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டம் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழில்நுட்பத்தின் மூலம் அப்பாவிகள் யாரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு விடக்கூடாது எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
தமிழக காவல்துறையின் பயன்பாட்டுக்காக, சந்தேக நபர்கள், குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் உள்ளிட்டோரை அடையாளம் காணும் ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜி பயன்பாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் கண்காணிப்பு மூலம், தமிழக காவல்துறையின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைப்பின்னல் அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்பட தரவுகளுடன், ஒரு தனிநபரின் புகைப்படத்தை ஒப்பிட்டு குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்களை அடையாளம் காண முடியும் எனவும், காவல் நிலையத்தில் இணையதள வசதி உள்ள கணினியிலும், களப் பணியின்போது இதற்கான கைபேசி செயலி மூலமாகவும் இந்த மென்பொருளை காவல் அலுவலர்கள் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
இன்று உலகம் முழுவதும் பரவலாகிய ஒரு தொழில்நுட்பம் சிசிடிவி கண்காணிப்பு. ஆனால் இந்த ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜி முறை மூலம் கண்காணிப்பு முறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். இது தானியங்கி மற்றும் கண்மூடித்தனமான கண்காணிப்பிற்கு வழிவகுக்கும். மேலும், இது அன்றாட வாழ்வில் நடக்கும் தனிமனிதனின் ஒவ்வொன்றையும் கண்காணிக்கும் ஆபத்தாகவும் இருக்கும்.
அமெரிக்க காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட அமேசான் நிறுவனத்தின் FRT Rekognition என்ற மென்பொருள் துல்லியமின்றி தவறுதலாக அடையாளம் காட்டியதோடு, அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த 28 உறுப்பினர்களை மற்ற குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளாக அடையாளம் கண்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதையடுத்து இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அப்பாவிகள் யாரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டது.
உலகளவில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே இதைப்போன்ற தொழில்நுட்பத்தை தடைசெய்வது அல்லது இதன் உபயோகத்தை தீவிரமாக குறைப்பது என்ற முடிவு எடுத்திருக்கும் போது, தமிழகத்தில் இந்த தொழில்நுட்பம் அமுல்படுத்தப்படுவது கவலையளிக்கிறது.
காவல்துறையின் பணிகளை எளிமைப்படுத்தவும், குற்றத்தை தடுக்கவுமான திட்டம் என்றாலும், இந்த திட்டத்தால் சாதங்களை விட பாதகங்களே அதிகம் உருவாகும் என்பதை மறுக்க முடியாது.
இந்த தொழில்நுட்பத்தின் துல்லியத்தன்மையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. பெரும்பான்மையான ஆய்வுகளில் இதன் துல்லியத் தன்மையின் அடையாளம் காணும் அல்காரிதம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த அல்காரிதம் பல சமயங்களில் தடுமாறிவிடுகிறது எனவும், இதனால் நிரபராதிகள் குற்றவாளியாக சித்தரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனநாயக தேசத்தை காவல்துறையின் கண்காணிப்பு தேசமாக மாற்றும் இத்தகைய அபாயகரமான தொழில்நுட்பம் இன்று தமிழகத்திலும் காலூன்றியுள்ளது கவலையளிக்கிறது.
மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தும் இந்த ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜி திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும். இதன் மூலம் தவறுதலாக அப்பாவிகள் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்களோ என்ற அச்சம் எழுகிறது. ஆகவே, இந்த தொழில் நுட்ப திட்டத்தை விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
தொழில்நுட்ப தவறுகள் மூலம் அப்பாவிகள் யாரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு விடக்கூடாது. ஒருவருக்கு தெரியாமலே அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் இந்த தொழில்நுட்பத்தில் அதிகமாக இருப்பதால், வரைமுறை இல்லாத இந்த தொழில்நுட்பத்தினால் சட்ட சிக்கல் அதிகமாக ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.
ஐநா போன்ற மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தெளிவான வரையறையை வகுத்துள்ளன. அது கண்காணிப்பு என்பது தெளிவாக குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டுமே ஆதாரத்தோடு கண்காணிக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. ஆனால், இந்த தொழில்நுட்பம் குற்றவாளி, நிரபராதி என்ற பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவரையும் கண்காணிக்கிறது. இதனால் மக்களின் தனிமனித சுதந்திரம் பாதிப்புக்கு ஆளாகும்.
ஆகவே, இந்த தொழில்நுட்பம் குறித்த ஆரோக்கியமான விவாதம் மிக அவசியமானது. முறையான சட்ட வரையறைகள், வழிமுறைகள் இல்லாமல் இந்த தொழில்நுட்பத்தை உபயோகிப்பது என்பது சுதந்திரமான ஜனநாயக நாட்டை ஒரு போலீஸ் கண்காணிப்பு தேசமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும். ஆகவே இந்த திட்டத்தை தொடர்வது குறித்து தமிழக முதல்வர் பரிசீலித்து திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.