பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 4 ஆயிரத்து 750 ஏக்கர் பகுதியில், சுமார் 12 கிராமங்களும் அம்மக்களின் வாழ்வாதார விளைநிலங்களும் உள்ளன. ஆகவே திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது திட்டத்தை கைவிட வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களின் போராட்டத்துக்கு ஆதரவு கோரினர். ஏகனாபுரம் ஊராட்சி தலைவரின் அழைப்பின் பேரில் மக்களை சந்திக்கச் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாஃபர் ஷரீப், பொதுச்செயலாளர் நஸூருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல்துறையால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
கிராம மக்களின் அழைப்பின் பேரில், காவல்துறையிடம் உரிய தகவல் அளித்துவிட்டு, மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கச் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் மீதான காவல்துறையின் அராஜக நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஜனநாயக வழியில் தங்கள் உரிமைக்காக போராடும் மக்களை சந்திப்பதை கூட அடக்குமுறை மூலம் தடுத்து நிறுத்துவது என்பது சட்ட விரோதமானது.
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது எத்தகைய அடக்குமுறைகளை கடந்த அதிமுக அரசு காவல்துறை மூலம் கையாண்டதோ, அதேபோன்றதொரு, அதற்கு சற்றும் குறையாத அடக்குமுறையை தான் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்கு எதிராகவும் தற்போதைய தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மக்களை நேரில் சென்று சந்திப்பதில் கூட இத்தகைய அராஜகம், அடக்குமுறையை கையாள வேண்டிய நிர்பந்தம் ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
எட்டு வழிச்சாலை திட்டத்தில் எதையோ மறைக்கவே அதிமுக அரசு அடக்குமுறையை கையாளுகிறது என அப்போதைய எதிர்கட்சியான திமுக குற்றம்சாட்டியது. அதேபோல் தான் பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் எதையோ மறைக்கத்தான் தற்போதைய திமுக அரசும் காவல்துறை மூலம் அடக்குமுறையை கையாளுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுமாக தற்போதைய தமிழக அரசு அதன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறைகள் தொடருமேயானால் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டங்களை மேற்கொள்ளும் என தெரிவித்துக்கொள்வதோடு, மக்களை திரட்டி நானே ஏகனாபுரம் மக்களை நேரில் சந்திப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு காவல்துறை அடக்குமுறையை கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, இந்த விவகாரத்தில் ஜனநாயக சக்திகள் தங்கள் மவுனத்தை கலைத்து, போராடும் மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.