நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை பின்னுக்குத்தள்ளி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி வெற்றிகளை பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் ஓட்டு போடும் போது ஒருசில வாக்குச்சாவடிகளில் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் ஆங்காங்கே பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒருசில இடங்களில் ஆளும் கட்சியான திமுக வெளியாட்களை இறக்கி கள்ள ஓட்டு போட்டதாகவும், வீடியோ ஆதாரங்களோடு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர், திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக கூறி திமுக தொண்டரை அரைநிர்வாணப்படுத்தி அவர் மீது தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இவ்விரு கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி தனித்து களம் கண்ட எஸ்.டி.பி.ஐ 26 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் கோவை மாநகராட்சியில் 1 வார்டும், நகராட்சியில் 8 வார்டுகளிலும், பேரூராட்சியில் 17 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் முத்துப்பேட்டை பேரூராட்சியில் மட்டும் மொத்தம் 4 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதிகார பலத்துக்கும், பணபலத்துக்கும் மத்தியில், ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் அக்கட்சி வேட்பாளர்கள் வென்றுள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இக்கட்சி கடந்த கொரோனா பேரிடரின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துவந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.