சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன், தம்பி வெற்றி இன்னமும் ஏதோ ஓர் இடத்தில் நலமோடு இருக்கிறார் (Seeman Consolation),
விரைவில் திரும்பி வந்துவிடுவார் என்பதே என் விருப்பமாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது…
“சைதை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சென்னை மாநகரத் தந்தையுமான எனது பேரன்பிற்கும்,
பெருமதிப்பிற்குமுரிய ஐயா சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன் வெற்றி அவர்கள் இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் மகிழுந்து கவிழ்ந்த விபத்தில் சிக்குண்ட செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
எல்லோரிடமும் அன்புடனும், மிகுந்த மரியாதையுடனும் பேசிப் பழகும் பெருங்குணமும், எளிமை பண்பும் ஒருங்கே கொண்ட தம்பி வெற்றியின் நிலை என்னவென்பது தெரியாத கொடுஞ்சூழல் மிகுந்த மனவலியை தருகிறது.
மனிதநேய அறக்கட்டளை மூலம் இலவசப் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியளித்துப் பல்லாயிரக்கணக்கான ஏழை-எளிய வீட்டுப் பிள்ளைகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருந்தகை ஐயா சைதை துரைசாமி அவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்து அதிகளவில் குடிமைப்பணி அதிகாரிகளை உருவாக்கி தந்த பெருமைக்குரியவர். ஐயா அவர்கள் மாநகரத் தந்தையாக இருந்தபோது சென்னையின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிகோலியவர்.
அப்படிப்பட்ட மாமனிதருக்கு நிகழ்ந்துள்ள இத்துயரச்சூழல் மனதை மிகவும் கனக்கச்செய்கிறது. இதிலிருந்து ஐயா துரைசாமி அவர்களும், அவரது குடும்பத்தினரும் உறுதியான மனத்திடத்துடன் மீண்டுவர வேண்டும்.
தம்பி வெற்றி இன்னமும் ஏதோ ஓர் இடத்தில் நலமோடு இருக்கிறார், விரைவில் திரும்பி வந்துவிடுவார் என்பதே என் விருப்பமாக இருக்கிறது.
மகன் நிலை அறியாது தவித்திருக்கும் ஐயா துரைசாமி அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்று என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன் (Seeman Consolation)” என்று கூறியுள்ளார்.