இயலாத சிலருக்கு உறுப்புகளைத் தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம் . அதனை ஊக்கவிக்கும் வகையில் உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது , பாராட்டத்தக்கது என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
இயலாத சிலருக்கு உறுப்புகளைத் தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம் ஆகும். மனித குல சேவைக்காக அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வரவேண்டும் என்று ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.
உடல் உறுப்புக்கள் செயலிழந்துபோவதாலும், வேறு ஒருவரின் உறுப்புக்கள் கிடைக்காததாலும் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இறக்கின்றனர். தேவைப்படும் நபர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே உடல் உறுப்புக்கள் கிடைக்கின்றன. மீதியுள்ள 90 சதவீதம் பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
சீராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா? மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம்.
இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம் என செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.